search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவையில் கனமழை"

    புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கி 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    பகல், இரவு என மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. லேசான மழையை தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் 1,500 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி உள்ளது.

    மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் வரப்புகளை வெட்டி திறந்து விட்டுள்ளனர். இருப்பினும் தொடரும் மழையால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மழை நின்றால் மட்டுமே பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுவதை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அதோடு இன்றைய தினம் (சனிக்கிழமை) புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி மொகரம் பண்டிகைக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இதனால் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது கனமழையும் மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வானிலை மையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்திருப்பதால் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் நாளை பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மோசமான வானிலை காரணமாக புதுவையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    தமிழகம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுவையில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RedAlertWarning #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அன்றைய தினம் 20 முதல் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கூடுதலாக மழைபெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியான புதுவையிலும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை 4 மணிக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் மாவட்ட கலெக்டர், அரசு துறையின் செயலர்கள், இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. #RedAlertWarning #Narayanasamy

    ×